மக்கள் நலன் கருதி எமது நாட்டுத் தலைவரும் சில விரும்பத்தகாத தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக, புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள பணி பெரிய கடினமான பணி எனவும், இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட, பசில் ராஜபக்ஸ இன்று மாலை தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
சமய அனுஷ்டானங்களின் பின் கடமைகளை பொறுப்பேற்ற அமைச்சர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அமைச்சர்,
அமைச்சர் என்பதை விட, நான் உங்களுடைய உதவியாளராக செயற்படவே விரும்புகின்றேன். உழைக்கும் மக்களின் குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் ஆதரவு அவசியம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளூராட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் வரை அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் எமது முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இது ஒரு பெரிய கடினமான பணி. இச்சவாலை ஏற்றுக்கொள்வோம் – அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சினைகள் என்ன என்பது குறித்து புரிதல் இருக்கின்றது.
சில சமயங்களில் ஒரு தந்தையைப் போல நாட்டு நலனுக்காக சில விரும்பத்தகாத காரியங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். எனினும் அவை மக்களுக்காக எடுக்கும் தீர்மானங்கள் என்றே நாம் கருதுகின்றோம்