ஸ்ரீலங்காவில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன்போது, ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சில முஸ்லிம் எதிரணி உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்காவில் ஒவ்வொரு வருடத்திற்குமான வரவு செலவுத் திட்டத்தின் முன்னரும் அல்லது பின்னரும் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்படுகின்றது. அந்த வகையில் எதிர்வரும் சில வாரங்களில் ஸ்ரீலங்கா அமைச்சரவையில் மாற்றமொன்று இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை இடம்பெறுகின்ற அமைச்சரவை மாற்றத்தின்போது, ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதவிர, ஸ்ரீலங்கா எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்துகொண்டு கடந்தமுறை 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் உறுப்பினர்களில் மூவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.