போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்திலோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலோ இந்த நடவடிக்கையை தான் என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறினார். கொழும்பில் ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நாமல், போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது என்றும் கூறினார். கொரோனா தொற்றினால் உலகமே எதிர்த்துப் போராடிவரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்க்கட்சியினர் மற்றும் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.