உயர்கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிராக தலைநகரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட குழு மீதான தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
“தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மீது இலங்கை அரசாங்கத்தின் அருவருப்பான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இடதுசாரிகளுடனான எங்கள் ஒற்றுமை இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது ”என அவுஸ்திரேலியா – விக்டோரியாவில் செயற்படும் சோசலிஸ அமைப்பு, சமூக ஊடகத்தின் ஊடாக தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னர் அவர்கள் அழைத்துச் செல்லப்படும் இடத்தையேனும் அறிவிக்காமல், காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்துச் சென்றதாக அவர்கள் சார்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் செயற்படும் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவருமான ஜோசப் ஸ்டார்லின் உட்பட சுமார் 30 பேர் நீதிமன்றத்தில் இருந்து துறைமுக காவல்நிலையத்திற்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், “நீண்ட பயணத்திற்கு” தயாராகுமாறு பொலிஸார் அவர்களிடம் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், குறைந்தது அவர்கள் அழைத்து செல்லப்படும் இடத்தைப் பற்றிய தகவலைக்கூட வழங்காமல், அவர்களில் எவருக்கும் படுக்கையைத் தவிர மாற்று உடைகளை எடுக்கவேனும் அனுமதிக்கப்படவில்லை என களத்தில் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தொற்றுநோய் சட்டங்களை மீறியதாகக் கூறி கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் விருந்துபசார நிகழ்வை நடத்திய ஒரு நடிகை உள்ளிட்ட குழுவிற்கு “அனுதாபத்துடன்” வசதிகளை வழங்கியிருந்த அரசாங்கம், உயர்கல்வியை இராணுவமயமாக்குவதை எதிர்த்தமையால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை.
பிரபல நடிகை பியுமி ஹன்சமாலி உள்ளிட்ட ஒரு குழுவை தனிமைப்படுத்தலுக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, அவர்களுக்குத் தேவையான ஆடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே கிடைக்கச் செய்வதில், பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சரே தலையீடு செய்திருந்தார்.
“இலங்கை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளை அனுதாபத்துடன் பரிசீலித்ததாகவும், தலையிட்டதாகவும்” பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் ஊடக செயலாளர் பின்னர் ஒரு அறிக்கை ஊடாக அறிவித்திருந்தார்.
எவ்வாறெனினும், நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பிற்கு எதிராக எந்தவொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.
ஒரு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ உள்ளிட்ட பலர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடந்த 7ஆம் திகதி பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.