நாட்டின் அரசியலமைப்பினை மீறியே தற்போது தனிமைப்படுத்தல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் ஸ்ரீலங்கா சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உள்ளது என்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலான சட்டங்களை விதிப்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் சட்டத்தை மீறிச்செயற்படுவதற்கான அதிகாரம் எந்தவொரு நபருக்கும் இல்லை. தற்போதைய சுகாதார நெருக்கடி நிலைமையின் கீழ் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உள்ளது.
இருப்பினும் நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலான சட்டங்களை விதிப்பதற்கோ அல்லது தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ அவருக்கு அதிகாரம் இல்லை.
அண்மையில் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு காவல்துறையினரால் வெளியிடப்பட்ட பணிப்புரையானது அரசியலமைப்பின் ஊடாக நாட்டுமக்களுக்கு வழங்கப்பட்ட கருத்துச்சுதந்திரத்தைப் பறிப்பதாகவே அமைந்துள்ளது. அந்தப் பணிப்புரையைப் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களைப் காவல்துறையினர் கைது செய்யும் நிலையொன்று உருவாகியிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.