ரஷ்யாவில் 13,000 அடி உயரத்தில் நாய்களுக்கு போர் பயிற்சி வழங்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் தற்போது நாய்களை வானிற்கு அழைத்துச் சென்று புதிதாக பயிற்சி அளிக்கப்படுகின்றன. ராணுவ ஹெலிக்காப்டரில் அழைத்துச் செல்லப்படும் நாய்கள், பாராசூட்டில் நிபுணத்துவம் பெற்ற வீரர்களுடன் ஒன்றாக கட்டப்பட்டு அந்தரத்தில் பறக்க விடப்படுகிறது.
இந்த பயிற்சியானது சுமார் 13,000 அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 13,000 அடி உயரத்தில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியைப் போலவே நாய்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், நாய்களுக்கு அளிக்கப்படும் ராணுவ பயிற்சிகள் பாதுக்காப்பாகவும், வெற்றிகரமாகவும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது. பயிற்சியில் ஈடுபடும் அனைத்து நாய்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள ரஷ்யா, தற்போதைய பயிற்சிகளில் நல்ல நிலையை எட்டியிருப்பதாகவும் கூறியுள்ளது.
பாராசூட் டெஸ்டிங் நிபுணர் ஆன்ரே தாபர்கோவ் (Andrei Toropkov) பேசும்போது ரஷ்யாவின் ராணுவ பயிற்சிகளில் அண்மைக் காலமாக நாய்களுக்கு இதுபோன்ற பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
வானத்தில் அந்தரத்தில் பறந்து நாய்களை கீழே கொண்டுவருவதில் தங்களுக்கு சவால்கள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அதனை ஹெலிகாப்டருக்குள் கொண்டு செல்வது சவாலாக இருப்பதாக கூறினார். ஒருமுறை ஹெலிகாப்டருக்குள் வந்தபிறகு அவை இயல்பாக இருப்பதாகவும், பயிற்சிகளை ரசித்து பயிற்சிகளை மகிழ்ச்சியாக மேற்கொள்வதாகவும் ஆன்ரே தாபர்கோவ் தெரிவித்தார். தனியாக குதிக்கும்போது சத்தமாக குறைப்பதாகவும், ராணுவ வீரர்களுடன் குதிக்கும்போது அவை அமைதியாக இருப்பதாகவும் ஆன்ரே கூறியுள்ளார்.
அடுத்தக் கட்டமாக, 26,000 அடி உயரத்திலிருந்து நாய்களை பறக்கவிட்டு சோதனையை மேம்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சோதனைகள் 2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய விமான உபகரணங்கள் உற்பத்தியாளரும் அடுத்த ஆண்டுக்குள் நாய்களுக்கான தனி பறக்கும் உபகரணத்தை (parachute system) திட்டமிட்டுள்ளது.