பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறவேண்டுமென அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தெரியவருகின்றது.
அரசுடன் முரண்படுவதைவிடவும் கட்சி செயற்பாடுகளை கிராம மட்டத்தில் பலப்படுத்துவதற்கான நகர்வையே தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுக்க வேண்டும் எனவும் மைத்திரிபால சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு (08) மைத்திரிபால தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அரச கூட்டணிக்குள் சுதந்திரக்கட்சிக்கு பாகுபாடு காட்டப்படுகின்றது. கிராம மட்டத்திலும் மொட்டு கட்சி உறுப்பினர்களால் புறக்கணிப்பு தொடர்கின்றது. இனியும் அரசுடன் இணைந்து பயணிப்பதில் பயணில்லை. எனவே, வெளியேறும் அறிவிப்பை விடுக்கவேண்டும்.” – என இக்கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதோடு “இது விடயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்ககூடாது. தற்போதைய சூழ்நிலையில் அரசியிலிருந்து வெளியேறுவது ஏற்புடைய நடவடிக்கையாக அமையாது. அவ்வாறு நடைபெற்றால் கைதுகள், பழிவாங்கல்கள் இடம்பெறக்கூடும் என மேலும் சில செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து கட்சியை மக்கள் மத்திக்கு கொண்டுசெல்லும் வகையில் பலப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் எனவும், தொகுதி மட்டத்திலான பொறிமுறை பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியேறுவதில் அவசரப்படாமல், கட்சியை பலப்படுத்துவதில் முன்னுரிமையளித்து செயற்படுவதே சிறப்பு என்ற திட்டத்தை மைத்திரியும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.