இந்தோனேசியாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டு பலர் மரணமடைந்து வரும் நிலையில் ஆக்சிஜனுக்காக உலக நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.
டெல்டா வைரஸ் பரவல் காரணமாக அந்நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தோனேசியாவில் இதுவரை 2,455,912 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
64,631 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 38,124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 871 பேர் மரணமடைந்துள்ளனர்.
தலைநகர் ஜகார்த்தா, ஜாவா பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மால்கள், மசூதிகளில் மக்கள் செல்வதற்கு அடுத்த இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் கட்டுப்பாடுகளை அரசு அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை கார் பார்க்கிங்கில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, மருத்துவமனைகளில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளும் அதிகரித்து வருகிறது. தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் தங்கள் வீடுகளிலேயே இறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தோனேசிய அரசு பல்வேறு நாடுகளை தொடர்பு கொண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
சீனா, சிங்கப்பூர், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆக்சிஜன் கோரி தூதரகம் வழியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.