தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற, வெலிக்கடை படுகொலையின் முக்கிய நேரடி சாட்சியாளருக்கு மீண்டும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
இனந்தெரியாத இரண்டு நபர்கள் ஜூலை 7ஆம் திகதி மாளிகாவத்தையில் உள்ள லக்கிரு செவன புகையிரத குடியிருப்பில் வசிக்கும் சுதேஷ் நந்திமல் சில்வாவின் அயல் வீட்டுக்காரர்களிடம் அவர் எங்கு செல்கின்றார்? என்ன செய்கின்றார்? போன்ற விபரங்களை கேட்டறிந்துள்ளதாக அந்த அமைப்பின், தலைவர், சட்டத்தரணி சேனக பெரேரா ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயமானது எதிர்காலத்தில் சுதேஷ் நந்திமல் சில்வாவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை வெளிக்காட்டுவதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸாரிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.