13.8 C
Manchester
27 June 2022
Image default
உலகம்

24 வருடங்களுக்கு பின்னர் மகனை கண்டுபிடித்த தந்தை: உணர்ச்சிகரமான சம்பவம்!

சீனாவில் 24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட தமது மகனுடன் மீண்டும் பெற்றோர் ஒன்றணைந்த உணர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றது.

தனது மகனை கண்டுபிடிக்க, 51 வயது தந்தை மேற்கொண்ட போராட்டம் சாதாரணமானதல்ல. 24 ஆண்டுகளில் தனது மகனை தேடி இவர் சுமார் 310,000 கிலோமீற்றர் தூரத்தை சீனா முழுவதும் தமது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார் குவோ காங்டாங்.

அவரது மகன் குவோ ஷின்ஜென் 2 வயதில் கடத்தப்பட்டார். 1997இல் சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள இவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு கடத்தல்காரர்கள் மகனை தூக்கிச் சென்றனர்.

கடத்தப்பட்ட தமது மகனைத் தேடி குவோ காங்டாங் மோட்டார் சைக்கிளிலேயே சீனாவின் 20 மாகாணங்களுக்கும் மேல் பயணம் செய்துள்ளார்.

இறுதியில் மகனை கண்டுபிடித்த பின்னர், மரபணு பரிசோதனை நடந்தது. கடந்த ஞாயிறன்று மரபணு பரிசோதனை முடிவு வந்தது. இதையடுத்து, அந்த குடும்பம் கடந்த ஞாயிறன்று உத்தியோகபூர்வமாக இணைந்தது.

மகனைத் தேடி அலையும் முயற்சிகளின் போது ஏற்பட்ட வீதி விபத்துகளில் இவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் கொள்ளைக்காரர்களையும் இவர் சந்தித்துள்ளார்.

24 ஆண்டுகளில் இவரது 10 மோட்டார் சைக்கிள்கள் தேய்ந்துபோயுள்ளன அல்லது பழைய பொருட்கள் கடைக்குச் சென்றுள்ளன.

கடத்தப்பட்ட தமது குழந்தையின் படத்தை, மோட்டார் சைக்கிளில் பதாகையாக ஏந்திக்கொண்டு தேடி அலைந்த இந்தத் தந்தை இதற்காகவே தம் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த பணத்தை செலவழித்துள்ளார்.

பாலங்களுக்கு அடியில் தூங்கி தமது இரவுகளை கழித்த இவர், தம்மிடமிருந்த பணம் தீர்ந்து போன போது பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார்.

தமது மகனைத் தேடும் முயற்சியின் போது காணாமல் போனவர்களை தேடுவதற்காக சீனாவில் உள்ள அமைப்புகளில் முக்கிய உறுப்பினராகவும் இவர் சேர்ந்தார். கடத்தப்பட்ட குறைந்தது ஏழு குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் மீண்டும் சேருவதற்கு இவர் உதவி செய்துள்ளார்.

இவரது மகன் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வெளியானவுடன் சீன சமூக ஊடங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமான செய்திகள் பதிவிடப்பட்டன.

குவோ காங்டாங்கின் குழந்தை கடத்தப்பட்டது மற்றும் அதை அவர் தேடி அலைவது ஆகிவற்றை அடிப்படையாகக் கொண்டு 2015ஆம் ஆண்டில் ‘லாஸ்ட் அண்ட் லவ்’ எனும் திரைப்படம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.

பெண் இயக்குநர் பெங் சான்யுவான் இயக்கிய இந்தப் படத்தில் ஹொங்கொங் நட்சத்திரம் ஆன்டி லாவ் நடித்திருந்தார். சீன பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் அவரின் மகன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடத்தல் தொடர்பாக, ஷாங்சி மாகாணத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று க்ளோபல் டைம்ஸ் ஊடகம் தெரிவிக்கிறது.

சந்தேக நபர்கள் இருவரும் கடத்தப்பட்ட குழந்தையை விற்று பணம் சம்பாதிக்க திட்டமிட்டிருந்தனர் என்று சைனா நியூஸ் உலகம் தெரிவிக்கிறது. டேங் எனும் தமது கடைசி பெயர் மூலம் மட்டுமே அடையாளம் காணப்படும் பெண்ணும், ஹு என்று அடையாளம் காணப்படும் ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல் நடந்த நேரத்தில் இவர்கள் இருவரும் உறவில் இருந்துள்ளனர். ஹு வேறு ஒரு குற்றத்திற்காக ஏற்கெனவே சிறையில் உள்ளார். டேங், ஜூன் மாதம் இந்தக் கடத்தல் வழக்கில் கைதானார். இவர்களுக்குள் இன்னும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

லாஸ்ட் அண்ட் லவ் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் கோரிக்கை எழுந்துள்ளனர்.

குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண், குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டார். அங்கு ஹு காத்துக் கொண்டிருந்தார்.

அதன் பின்பு அருகிலுள்ள ஹெனான் மாகாணத்துக்கு அந்தக் குழந்தையைத் தூக்கிச் சென்ற இந்த ஜோடி, அங்கு அந்த குழந்தையை விற்றனர். உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி குவோ காங்டாங்கின் மகன் குவோ ஷின்ஜென் அவன் ஹெனான் மாகாணத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.

குவோ ஷின்ஜென் ஹெனான் மாகாணத்தில் தற்போது ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் என்று சீன ஊடகங்கள் கூறுகின்றன. “இப்போது என் மகனை நான் கண்டுபிடித்து விட்டேன் இனிமேல் எல்லாமே மகிழ்ச்சிதான்,” என்று குவோ காங்டாங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பல பத்தாண்டுகளாகவே குழந்தை கடத்தல் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. கடத்தப்படும் குழந்தைகளை மீண்டும் பெற்றோருடன் சேர்க்க ‘ரீயூனியன் ப்ராஜெக்ட்’ எனும் திட்டத்தை சீன அரசு செயல்படுத்துகிறது.

ஆண்டுக்கு குறைந்தது 20,000 குழந்தைகள் இவ்வாறு கடத்தப்படுகிறார்கள் என்று 2015இல் வெளியிடப்பட்ட ஒரு தரவு தெரிவித்தது.

காணாமல் போன குழந்தைகளை கண்டறிய, காணாமல் போன குடும்பங்களின் டிஎன்ஏ தரவுத்தளம் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் 2,600 இற்கும் அதிக குழந்தைகள் தமது குடும்பத்துடன் இணைந்துள்ளன.

Related posts

மிகவும் அரிதான தங்க இரத்தம் கொண்ட பெண்; எங்குள்ளார் தெரியுமா?

SudarSeithy

உலகின் பெரும் ஆச்சர்யம்; கொரோனா பரவாத ஒரே ஒரு நாடு! எங்குள்ளது தெரியுமா?

SudarSeithy

கொரோனா காலத்தில் உலகின் முதல் 10 செல்வந்தர்கள்; 2 மடங்கு உயர்ந்த சொத்துமதிப்பு

SudarSeithy