பாகிஸ்தானில் வழக்கறிஞர் ஒருவரை தாக்கிய இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை தரப்பட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
கராச்சியை சேர்ந்தவர் மிர்சா அக்தர். இவர் மூத்த வழக்கறிஞர் ஆவார். கடந்த மாதம் காலையில் இவர் நடைபயிற்சி செய்த போது இரண்டு நாய்கள் கடித்து கடும் தாக்குதலை நடத்தியது. இதில் மிர்சா பலத்த காயமடைந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மிர்சா தன்னை தாக்கிய நாய்களின் உரிமையாளரை சில நிபந்தனைகளுடன் மன்னித்துள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. அதாவது மிர்சாவுக்கும், செல்லப்பிராணியின் உரிமையாளருக்கும் இடையில் நீதிமன்றத்திற்கு வெளியே எட்டப்பட்ட ஒரு தீர்வாக இது உள்ளது.
Violent #Dogattack in #DHA Phase 7, Street number 14. #Karachi.#Pakistan pic.twitter.com/TxFhq6TiQL
— Asad Zaman 🇵🇰 (@asadweb) June 27, 2021
அதன்படி, இரண்டு நாய்களுக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதே முதல் நிபந்தனையாகும்.
அதாவது இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நாய்களும் உடனடியாக ஒரு கால்நடை மருத்துவரால் கருணைக்கொலை செய்யப்படும் என்பதே அதன் அர்த்தமாகும்.
மேலும் மிர்சாவுக்கு ஏற்பட்ட காயத்திற்கு நாய்களின் உரிமையாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு, அவர் ஆபத்தான அல்லது மூர்க்கமான நாய்களை செல்லப்பிராணிகளாக தனது வீட்டில் வைத்திருக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் சாட்சிகளும் கையெழுத்திட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனிடையில் இந்த ஒப்பந்தம் அபத்தமானது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.