கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் இன்று முதல் மாகாணங்களுக்கிடையிலான ரயில்களை இயக்க அனுமதி அளித்துள்ளது என இலங்கை ரயில் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க காலையிலும் மாலையிலும் ரயில்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அவர்கள் கூறியுள்ளனா்.
அதன்படி மாஹோ – கொழும்பு கோட்டை இடையே ஒரு ரயில் சேவையும் கண்டி -கொழும்புக்கிடையே இரு ரயில் சேவைகளும் பெலியத்த – மருதானை இடையே ஒரு ரயில் சேவையும் காலி – மருதானை இடையே ஒரு ரயில் சேவையும் சிலாபம் – கொழும்பு கோட்டை இடையே ஒரு ரயில் சேவையும் ரம்புக்கனை – கொழும்பு கோட்டை இடையே ஒரு ரயில் சேவையும் இன்று முதல் இயக்கப்படும்.
அனைத்துப் பயணிகளும் சமூக இடைவெளி பேணுதல் உட்பட சுகாதார வழிகாட்டல்ககளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அத்தியாவசிய சேவைகளிலுள்ள பயணிகள் தமது அலுவலக அடையாள அட்டை மற்றும் சேவைக்குத் தேவையான ஆவணத்துடன் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.