யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வு வரும் ஜூலை 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நடவடிக்கைகளின் கால ஒழுங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் ஜெ.ஜெயரஞ்சன் வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் ஜூலை 28 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகும். வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகும்.
அதேபோன்று யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வு திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். வெள்ளிக்கிழமைகளில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மீண்டும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நீதிமன்ற நடவடிக்கைகளில் இவ்வாறு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.