அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லும் முடிவை மைத்திரி அணி கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் சந்திப்பானது கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லும் முடிவை மைத்திரி அணி கைவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்த இருவரைத் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்திற்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மைத்திரி பட்டியலிட்டுள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்மானமொன்றை எடுக்க நேரிடும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கு சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், அந்த சந்திப்பின்போது இவ்வகையான பிரச்சினைகள் பற்றி ஆழமாக பேச்சு நடத்தி தீர்மானங்கள் எடுக்கலாம் என்ற முடிவுக்கு இவ்விருவரும் வந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தனக்கு இந்த அரசாங்கம் வழங்கிய இராஜாங்க அமைச்சுப் பதவியானது கேலித்தனமானது என்று பகிரங்கமாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின் ஊடாக, அரசாங்கத்திற்கும், மைத்திரி அணிக்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை வெளிச்சத்திற்கு வந்திருந்தது.
தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து செயற்படப்போவதில்லை என்று முடிவு செய்திருந்த மைத்திரி அணியினர், அமைச்சுப் பதவிகளைக் கைவிடுவதற்கும் தற்காலிக முடிவுகளை எடுத்திருந்தனர்.
இந்தப் பின்னணியிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன தற்போது மனம் மாறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.