சூயஸ் கால்வாயில் ((Suez Canal) தரைதட்டி நின்ற சரக்குக் கப்பல் வரும் புதன்கிழமை அதிகாரிகளிடமிருந்து விடுவிக்கப்படவுள்ளது.
எவர் கிவன் (MV Ever Given) எனும் அந்த ஜப்பானியக் கப்பலின் உரிமையாளர்களுடன் இழப்பீடு குறித்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
200,000 டன் சரக்குகளுடன் வந்த எவர் கிவன் கப்பல், கடந்த மார்ச் மாதம் 23-ஆம் திகதியிலிருந்து சூயஸ் கால்வாயில் சுமார் ஒரு வாரமாக தரைதட்டி நின்றது. அதனால் பல கப்பல்கள் கால்வாயைக் கடக்கமுடியாமல் சிக்கிக்கொண்டன.
எகிப்தின் பொருளியலுக்கு முக்கியமான அந்தக் கால்வாயில் போக்குவரத்து தடைப்பட்டதால், வருமானத்தில் இழப்பு ஏற்பட்டது. நாள்தோறும் சுமார் 12 மில்லியன் முதல் 15 மில்லியன் டொலருக்கு இடைப்பட்ட வருமானம் இழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
எனவே, அதிகாரிகள் சரக்குக் கப்பலின் மூலம் ஏற்பட்ட இழப்பு, அதை மீண்டும் மிதக்க வைப்பதற்கான செலவு,கப்பலைச் சீரமைக்கும் பணிகள் ஆகியவற்றுக்கு இழப்பீடு கோரினர். கப்பலையும் பறிமுதல் செய்தனர்.
இத்தனை நாட்களாக கப்பலின் உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்தப்பட்டு, தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடக்கத்தில் 900 மில்லியன் டொலர் இழப்பீட்டைக் கோரிய எகிப்து, இறுதியாக இப்போது 550 மில்லியன் டொலருக்கு இறங்கி வந்துள்ளது.
இந்தநிலையில் வரும் புதன்கிழமை (ஜூலை 7) எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாய் அதிகாரிகளிடமிருந்து விடுவிக்கப்படவுள்ளது.