15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

யாழில் ஓரம்கட்டப்பட்ட அங்கஜன் தரப்பு

யாழ் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீட்டுத் திட்ட பயனாளிகள் தெரிவில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தலையீடு முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும், அரச உயர்மட்ட உத்தரவிற்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் அங்கஜன் தரப்பு ஆடிப்போயிருக்கிறதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் யாழில் பயனாளிகள் தெரிவில் தமது பட்டியலை புகுத்தி, அடிக்கல் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அரசியல் செய்த அங்கஜன் தரப்பு பெரும் ஏமாற்றமடைந்துள்ளது. அங்கஜன் இராமநாதன் தரப்பின் அரசியல் தலையீட்டுடன் யாழ் மாவட்டத்தில் தெரிவான பயனாளிகள் பட்டியல் இனி செல்லாது. புதிதாக- வெளிப்படைத்தன்மையுடன்- புள்ளிகள் அடிப்படையில் புதிய பட்டியல் தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதன்படி நாளை முதல் பயனாளி வசிக்கும் பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம சேவகர் அலுவலகம், அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களில் புதிய பட்டியல் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை தமிழ் மொழியில், பயனாளிக்கான புள்ளிகளுடன் பட்டியல் பகிரங்கமாக காட்சிப்படுத்தப்பட்டு, வெளிப்படை தன்மையுடன் திட்டம் முன்னெடுக்கப்படுவதன் மூலம், அரசியல் தலையீடுகள், தேவையற்ற தலையீடுகளை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் யாழ் மாவட்டத்தின் அனைத்து நிர்வாக அலகுகளிலும் அங்கஜன் இராமநாதன் தரப்பில் அதீத அரசியல் தலையீடு காணப்பட்டது. திறமையான அதிகாரிகள் பலர் இடமாற்றமென பந்தாடப்பட்டதுடன் உள்ளக இடமாற்றங்களும் நடந்தன.

அத்துடன் இந்த அரசியல் தலையீட்டிற்கு அரச அதிபரும் அனுமதிக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்திருந்தன. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரையும் அங்கஜன் தரப்பு கட்டுப்படுத்த முயன்று, முறுகல் ஏற்பட்ட சமயத்தில், “எங்களுடன் எப்படி ஒத்துழைத்து நடப்பதென்பதை யாழ்ப்பாண அரச அதிபரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்“ என அறிவுரை கூறப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதுமட்டுமல்லாமல் யாழ் மாவட்ட செயலகத்தில் உயரதிகாரிகளிற்கும் அரசியல்வாதியின் தரப்பினர் கட்டளையிடுவதாகவும் விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. யாழ் மாவட்டத்தில் அரச, மற்றும் தன்னார்வ அமைப்புக்களால் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான திட்டங்களில் அங்கஜன் இராமநாதன் தரப்பின் பிரசன்னம் இருந்தது.

பல நிவாரண பட்டியல்கள் அரசியல்வாதியின் தரப்பினால் வழங்கப்பட்டதாகவும் விமர்சனம் எழுந்தது. போரால் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீட்டு திட்ட பயனாளிகள் தெரிவிலும் இதே நிலைமைதான் . வழக்கமாக இப்படியான விவகாரங்கள் என்றால், எப்படியோ இரகசியமாக அதிகாரிகளே ஊடகங்களிற்கு தகவல் வழங்கி விடுவர்.

ஆனால் இம்முறை மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் வாயே திறக்கவில்லை. எனினும், புலனாய்வு பிரிவுகள் இந்த நிலைமையை அரச உயர்மட்டத்திற்கு அறிக்கையிட்டதையடுத்து அரச தரப்பு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. பிரதமர் மஹிந்த ராஜக்சவின் இணைப்பு செயலாளராக பணயாற்றிய காசிலிங்கம் கீதநாத், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற, வீட்டுத்திட்ட மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் யாழில் நடக்கும் முறைகேடுகளை சுட்டிக்காட்டி, அரசாங்கம் செலவிடும் பணம் சரியான பயனாளிகளிற்கு செல்வதை உறுதிசெய்யுமாறு அரச தலைமையால் அவர் பணிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. யாழில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், அவற்றை கண்டறிவது சிரமமிருக்கவில்லை. தென்மராட்சி பிரதேச செயலக பயனாளிகள் தெரிவில் பெரும் முறைகேடு நடந்ததாக கிடைத்த தகவலையடுத்து, கா.கீதநாத் அங்கு அதிரடியாக ஒரு கூட்டத்தை கூட்டி, விடயங்களை ஆராய்ந்தார்.

அதன்போது சுமார் 38 பயனாளிகள் நீக்கப்பட்டு, அதற்காக வேறு நபர்கள் அரசியல் தலையீட்டினால் உள்புகுத்தப்பட்டது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக, யாழிலுள்ள உயர் அதிகாரி தொடக்கம் கீழ் மட்ட உத்தியோகத்தர்கள் வரை, தாம் எதிர்கொள்ளும் அரசியல் அழுத்தங்களை பிரதமரின் பிரதிநிதிகள் தரப்பிற்கு தெரிவித்துள்ளனர்.

அரசியல் அழுத்தத்திற்கு அடி பணிய மறுத்தமைக்காக கோப்பாய் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலைமைகளை அரசின் உயர்மட்டத்தின் காதுகளிற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, பயனாளிகள் தெரிவில் அரசியல் தலையீட்டை முற்றாக அகற்றி, வெளிப்படையானதும், நீதியானதுமான புதிய பெயர்ப்பட்டியலை தயாரிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே, யாழ் அரச அதிபர் புதிய சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி, ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பயாளிகள் பட்டியலின்படி அல்லாமல், புதிய- சரியான பட்டியலை ஒப்படைக்க பிரதேச செயலாளர்கள் பணிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

முடங்குகிறதா இலங்கை? ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு

SudarSeithy

தமிழர் பகுதியில் இளைஞரின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்

SudarSeithy

பிரித்தானியாவில் 2011ம் ஆண்டு சுடப்பட்டு உயிர்தப்பிய ஈழத்தமிழச்சி நிகழ்த்திய பாரிய சாதனை!

SudarSeithy

Leave a Comment