180 மில்லி லிற்றர் அளவிலான மதுபான போத்தல்களை தடை செய்யுமாறு புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக, 90 சதவீதமான மக்கள் 180 மில்லிலீட்டர் அளவிலான மதுபான போத்தல்களை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்ததாகவும் அவர் கூறுகின்றார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்தோடு இக் கொள்கைகளை வகுக்கும் அரச அதிகாரிகள், பொதுமக்களின் இந்த எண்ணத்தை செவிமடுப்பார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இதேவேளை, சிகரட் மீதான வரியை அதிகரிக்கும் வகையிலான கொள்கைகளை வகுத்து, இந்த முறை வரவு செலவுத்திட்டத்தில் அதனை யோசனையாக முன்வைக்குமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
மேலும் இந்த வரி கொள்கை இந்த ஆண்டு இறுதி முதல் அமுல்படுத்தப்படுமாக இருந்தால், 101 பில்லியனாக தற்போது காணப்படுகின்ற சிகரட் வரி மீதான வருமானம், 2026ம் ஆண்டாகும் போது 136 பில்லியனாக அதிகரிக்குமென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.