வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் பின்பகுதியில் தலையில் காயத்துடனும், கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்ட பொலிசார் வவுனியா தடவியல் பொலிஸாரின் உதவியுடன் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலத்திற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிசார் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கள் இடம்பெற்றிருந்தன.
இருப்பினும், மேலதிக தகவல்கள் தேவைப்பட்டமையால் சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதனால் உடலை எரியூட்டாமல் புதைக்கவேன்டும் என சட்ட வைத்திய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டு சடலம், ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.