13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக நடந்தேறிய மகப்பேற்று சத்திரசிகிச்சை

கல்முனை ஆதாரவைத்தியசாலையில் கொரோனாத் தொற்றையுடைய 39 வயது கர்ப்பிணியொருவருக்கு பாதுகாப்பான முறையில் அவசர மகப்பேற்றுச்சத்திரசிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

இந்த அவசர சத்திர சிகிச்சை முதல் தடவையாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. தற்போது தாயும் சேயும் 24 மணிநேர கண்காணிப்பில் நலமாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இத்தகவலை கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை காலை அம்பாறையையடுத்துள்ள சென்றல்கேம்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வார கர்ப்பகால தாய் ஒருவர் மகப்பேற்றிற்காக அனுமதிக்கப்பட்டார்.

அதன் போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலையில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சைப் பிரிவில் குறித்த கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.

அவருக்கான சிகிச்சைத் திட்டமிடல்கள், சிகிச்சைகள் அனைத்தும் மகப்பேற்றுப் பிரிவு, கோவிட் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட அனைவரினதும் அர்ப்பணிப்பான சேவை மூலம் நோயாளிக்கு வழங்கப்பட்டு வந்தது.

பின்னர் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை பி.ப.6.00 மணியளவில் மகப்பேற்று சிகிச்சைப் பிரிவினரின் சிகிச்சைத் திட்டத்திற்கு அமைய அதே கொவிட் பிரிவில் அவசர சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு குழந்தையும் தாயும் வைத்தியசாலையில் அமைந்துள்ள கோவிட் விசேட சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்தும் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த துணிகரமான அர்ப்பணிப்புடன்கூடிய சத்திரசிகிச்சையில் மயக்க மருந்து நிபுணர் உட்பட வைத்தியர்கள், சத்திர சிகிச்சைக்கூட தாதியர்கள் என அனைத்து ஊழியர்களும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்ததாகவும் அவர் குறிபிட்டார்.

அதோடு வைத்திய அத்தியட்சகரின் சிறந்த வழிகாட்டுதல் மூலமும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஏனைய அனைத்து ஊழியர்களினதும் அர்ப்பணிப்பான சேவைகள் மூலம் வைத்தியசாலையின் வழமையான சேவைகளுக்கு மேலதிகமாக பல மாதங்களுக்கு முன் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட கோவிட் நோயாளர்களுக்கான விசேட சிகிச்சை பிரிவின் மூலம் கோவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கான சிகிச்சைகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் 20 க்கும் மேற்பட்ட படுக்கைகளையும் விசேட மகப்பேற்று சிறுபிள்ளை பிரிவுகளையும் கொண்ட இந்த விசேட கொவிட் பிரிவினூடாக இதுவரை சுமார் 130 க்கு மேற்பட்ட கோவிட் உறுதி செய்யப்பட்ட நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பிராணி!

SudarSeithy

அடுத்த வாரம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கப்போகும் விசேட செய்தி

SudarSeithy

இசையமைப்பாளர் இராஜின் இறுதி எச்சரிக்கை!

SudarSeithy

Leave a Comment